நம் குரல்

அகத்திணை - 3





இக்கோடைக்காலம் வேறுவேறு மாழ்பழ வகைகளின் வித்தியாசமான சுவைகளால் நிறைந்திருந்தது. அதிலும் ஹிமாம் பசந்த் பழத்தின் சுவைக்கும் மணத்திற்கும் கோடைக்காலங்களை எழுதித் தீர்க்கலாம்.


வீட்டிற்கு வேலைக்கு வரும் சந்தியா தினமும் தனது குடும்பத்தின் கண்ணீர் வற்றாத சோகக் கதைகளை பக்கம் பக்கமாகச் சொல்லி மாய்கிறாள். ஒரு நாளைக்கு எப்படியும் குறைந்தது நான்கு வீடுகளிலாவது வேலை செய்கிறாள். ஒரே பிரச்சனையின் வேறு வேறு முகங்கள் என ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கி வைத்திருப்பாள் போலும். மறுநாள் காலையில் மிகவும் உற்சாகமாயிருப்பாள்.



எழுதும் பொழுது மடிக்கணினியின் அருகில், நான் எழுதும் விஷயத்தின் உண்மையின் உருவம் வந்தமர்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, அதன் ரசத்தை இழக்காமல் மரியாதையைக் குலைக்காமல் அழகைச் சிதைக்காமல் எழுதுகிறேனாவென்று. நான் அதற்கு அடங்கிப் போகிறேன்.



என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வுகள் தமது சுவாரசியங்களை இழந்து விட்டன. காரணங்களில் ஒன்று, தினம்தினம் செய்தித்தாள்களின் இடத்தை நிரப்பத் துடிக்கும் அவற்றின் வேட்கை. இரண்டு, கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்படும், அரசியல் அதிகாரத்திற்கென மனித உறவுகள் நெய்யும் போலியான தற்காலிகமான புனைவுகள். மூன்று, என்ன தான் இந்த அரசின் கட்டங்களுக்குள் நகர்த்தப்படும் காய்கள்தாம் நாம் என்றாலும் நமது சுயசிந்தனைகளை இவை விலைக்கு வாங்க முடியாது எனும் தன்னம்பிக்கை.



என் எழுத்தின் வெளிக்குள்ளும் மழை பெய்யத் தொடங்கிவிட்டதை உணர்கிறேன். பூமியின் கருணை இது! இந்த முறை கோடையின் வதை எத்தனை முதியவர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்குமோ? அப்படிக் காய்ந்தது வெயிலின் வானம் மூர்க்கமாய்.



லூயி புனுவலின் இறுதி சுவாசம் என் பையை நீண்ட நாட்களாக விருப்பீர்ப்பத்துடன் அடைத்துக் கொண்டிருக்கிறது. சா. தேவதாஸின் மொழி பெயர்ப்பு. கொஞ்சம் அவசரமான பதிப்போ என்று தோன்றினாலும் லூயி புனுவல் வழங்கும் அவருடைய உலகத்தின் நேர்மையும் மென்மையான அணுகுமுறையும் நம் எல்லோரையும் நமது வாழ்க்கையை எச்சரிக்கையுடன் அணுகத் தூண்டும்.



என்னை பெண்களே விமர்சிக்கும் பணியைத் தான் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தம்மை பெண்ணாக ஒட்டுமொத்தப் பெண்களின் பிரக்ஞையாக பரந்த பிரபஞ்சத்தில் தமது கடமையாக எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதன் ஆழமும் அர்த்தமும் அப்பொழுது தான் வெளிப்படுகிறது. எதிர்மறையான குணாதிசயங்களுடன் அவர்கள் வெளிப்பட்டாலும் கூட. ஆண்களோ பெண்களை விமர்சிப்பதே இல்லை; அவதூறு செய்கிறார்கள்.



ஒவ்வொரு முறையும் தினப்படி வாழ்க்கையின் அலுப்பூட்டும் காலகட்டத்தைக் கடக்க நேரும் போதெல்லாம் ‘புது விசைஇதழை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விரும்பி வாசித்து எழுவேன். அது தன்னில் இடம்பெறும் படைப்பு ஒவ்வொன்றின் வழியாகவும் ஒரு புதிய திசையைக் காட்டுகிறது.


என்னை நிறைய நதிகள் கடந்து போகின்றன. எப்பொழுதாவது தான் ஏதோ ஒரு நதியில் இறங்கி கால் நனைக்க விரும்புகிறேன். சிலவற்றில் மூழ்கி எழ.



குட்டி ரேவதி

மீன்தொட்டி




மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள்

வளையவரும் தொட்டியாய் இருந்தேன்

இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை

பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை

உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி

குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும்

உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும்



ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும்

கடலாக்கியது என்னை

சுவரை எட்டியுதைத்தன என்குஞ்சுகள்





குட்டி ரேவதி

தயவுசெய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்! - ஒரு கடிதம்





இக்கடிதத்தை சிலவாரங்களுக்கு முன்பே வலைப்பதிவில் எழுத எண்ணியிருந்தேன். இப்பொழுது தான் சமயம் வாய்த்தது. அன்பார்ந்த நேயர்களே! என் எழுத்துகளை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் மறைமுகமாக உங்களை வாசிக்க வைக்கும் தந்திரம் ஏதுமில்லை.


என் எழுத்தை பத்து வாசகர்களுக்கு மேல் படிப்பதை நான் விரும்பவில்லை. அத்தகைய எழுத்து குறித்த சந்தேகங்கள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே இன்னும் ஆழ ஆழ வேரோடிக் கொண்டே இருக்கின்றன என்னுள். எண்ணிக்கை நிமித்தமான வாழ்க்கை எத்தகைய பேதலிப்பைத் தரும் என்பதை எல்லா வகையிலும் மேலும் மேலும் நான் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.


என்னுடன் வதியும் மனோ கூட என் கவிதைகளை வாசித்திருக்கமாட்டார். அத்தகைய பாதுகாப்பை என் எழுத்துகளும் பெற்றிருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவ்வளவு சொற்பமான இடத்தைத் தான் எழுத்து வாழ்க்கையில் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமானோர் வாசித்தால் என் எழுத்தில் ஏதோ குறையிருப்பதான ஒரு குற்ற உணர்வு என்னைத் தொற்றிக்கொள்ளும். ஆகவே, தயவு செய்து யாரும் என் எழுத்தை வாசிக்காதீர்கள்!




தமிழகத்தில் கவிதையை வாசித்தோ விவாதித்தோ வாழ்வதற்கான உரையாடலையும் இன்முகத்தன்மையையும் இலக்கிய அரசியல் இழந்து விட்ட நிலையில் என்னிடம் பராதிகள் ஏதும் இருக்கமுடியாது அல்லவா? எழுதிய கவிதையை வாசித்துக்காட்டி அதன் நுணுக்கங்களைப் பற்றி விரிவாக உரையாடுவதற்கான பெருந்தன்மைகள் அபூர்வமானவை.


நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறேன். வலைப்பதிவு என்பதையும் ரகசியமான ஒரு நாட்குறிப்பேட்டைப் போன்றதொரு வெளியாக உணர்கிறேன். அத்தகைய அக உலகிற்கான பிரவேசங்கள் மிகக் குறைந்த நபர்களுக்கே சாத்தியமானது என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? என் எழுத்தின் இறுக்கத்தைத் தாண்டி செல்வதற்கான துணிவை எடுத்துக்கொள்வோருக்காக மட்டுமே நான் எழுத்தைத் திறந்துகொடுக்கிறேன்.


மெல்லிய குறட்டை சத்தங்கள் என் வரிகளுக்கிடையே ஒளிந்திருக்கக்கூடும். என் வாழ்வின் சுவாரசியங்கள் குறித்த சத்தியங்களை எழுத்தின் வழியாக செய்து கொள்ளவேண்டிய அவசியமில்லை தானே! அத்தகைய சத்தியங்கள் வேட்டைநாய்களுடையவை என்று ஒரு பழமொழி உண்டு. நான் நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எழுதுவது என்பது என் தீவிரத்தை ஆற்றுப்படுத்தும் ஒரு பணி. நிறைய பயணம் செய்தல், வேறு வேறு உலகங்களை என் ஆழ் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் பரிச்சயப்படுத்திக்கொள்ளல் என...அதில் எழுத்தை மட்டுமே அதிகாரமயமாக்காமல் வைத்துக்கொள்ள முடியுமானால்... என் கவலைகள் எல்லாம் என் அக உலகம் பற்றியது தான். அதை எழுத்தில் கொண்டு வருவதற்கான மூர்க்கமும் ஆதங்கமும் எனக்கு இல்லவே இல்லை.



எந்தப் பட்டியலில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என் பெயர் காலத்தின் நதியில் மிதந்து செல்லும் ஒற்றைச் சருகு. எல்லாருடைய பெயரும் அப்படித்தானே?



வாசிக்க வாசிக்கத் தெவிட்டாத எழுத்தாக, இத்தனை வருடங்களுக்குமான ஊக்கத்தைத் தன்னகத்தே கொண்ட கவிதைகளாக இருப்பவை இளங்கோவடிகளின் வரிகள் மட்டுமே. நல்ல வேளையாக தன் பெயரை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்வதற்கான காலம் அவருக்கு இல்லை என்பது அவரின் கவிதை உலகத்திற்குள் பயணிக்க என்னை அனுமதிக்கிறது. எளிதாகவும் இருக்கிறது. கண்ணகியை கவிதை படைக்க ஒரு சாக்காகவே வைத்து தன் அறங்களைப் பயின்றிருக்கிறார். இன்று வரை அவர் இடம்பெற்ற பட்டியலில் வேறு எந்த எழுத்தாளர் பெயரும் இல்லை.



இன்னும் மிச்சம் இருக்கிறது என்னுடைய வாதம். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே என்னைப் பெண் என்றும் அதற்கான நியமங்களையும் என் மீது சுமத்தாதீர்கள் என்பதே அது. நான் ஒரு பெண் மட்டுமே அல்ல. பெண் என்பது முதன்மையான சமூக அடையாளம் அவ்வளவே. வேறு அக புற சமூக அடையாளங்களும் எனக்கு உண்டு. ஆனால் பெண்ணின் இயலாமைகள் துயரங்கள் எல்லைகள் உச்சங்கள் இவற்றிற்கிடையேயான தொடர்புகள் பொருத்தப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் என்னிடம் தீராதவையாக இருக்கின்றன. ஆனால் என் வாழ்வில் சம்பந்தப்படாத நபரையோ பெண்ணையோ பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் என்னிடமிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றனர்.



இதை எழுதுவதற்கு முற்றிலும் காரணமான சத்தியாவின் கடிதத்திற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். சத்தியா, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல எனது தெரு எவர் வீட்டு வழியாகவும் நீள்வதில்லை என்பதால் அவர் கொடுத்திருக்கும் பட்டியலை திரும்பப்பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.



சத்தியா கவிதையின் வரலாற்றில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா என்று அநியாயத்திற்குக் கவலைப்பட்டிருந்தார். கவிதையின் வெளி பொது. அல்லது தேவதேவன் சொல்வதைப் போல சொர்க்கம் அது.

தேவதேவனின் ‘அறுவடைகவிதை:

நீரில் தெரியும் நெற்கதிர்கள்

சொர்க்கத்தின் விளைச்சல்கள்

நாம் அதனை

நேரடியாய் அறுக்கமுடியாது.

அன்புடன்,

குட்டி ரேவதி